செய்திகள்
வாக்கு எண்ணும் மையம்

கர்நாடகா இடைத்தேர்தல்- 15 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Published On 2019-12-09 02:56 GMT   |   Update On 2019-12-09 02:56 GMT
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது.
பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா சார்பில் 13 தொகுதிகளில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களும், ராணிபென்னூரில் அருண்குமார் புஜார், சிவாஜிநகரில் எம்.சரவணா ஆகியோரும் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் முக்கியமாக ராணிபென்னூரில் முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட் போட்டியிட்டார். ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் 12 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 2 தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் மனுவை வாபஸ் பெற்றனர். ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவுக்கு அக்கட்சி ஆதரவு வழங்கியது. இந்த இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 165 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்த இடைத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாயின. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 11 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கே வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்று வெளியாகும் இடைத்தேர்தல் முடிவில், எடியூரப்பா அரசு பெரும்பான்மை பலம் பெற பா.ஜனதா குறைந்தது 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இந்த எண்ணிக்கை குறைந்தால், எடியூரப்பா அரசுக்கு சிக்கல் எழும். அதனால் இன்று வெளியாகும் இடைத்தேர்தல் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் எடியூரப்பா அரசு அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News