செய்திகள்
மீன்கள் இறப்பு (கோப்புப்படம்)

கங்கை கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்

Published On 2019-12-07 09:30 GMT   |   Update On 2019-12-07 09:30 GMT
உத்தரபிரதேசத்தில் கங்கை நதி கால்வாயில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 முசாபர்நகர்:

மனிதர்களின் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடுகளினால் இயற்கை அதிகளவில் மாசடைந்து வருகிறது. நெகிழி கழிவுகள் மட்குவதற்கு பலநூறு ஆண்டுகள் ஆவதால் நிலம் மாசடைகிறது. மட்காத இந்த கழிவுகளால் மழைநீர் நிலத்தினுள் உட்புகுவதும் தடை படுகிறது.

இந்த நெகிழிக் கழிவுகள் நீர்நிலைகளில் கொட்டப்படுவதால் நீர் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன. இது மட்டுமல்லாது ரசாயனக்கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதாலும் நீர் மாசடைகின்றது. ஆறுகளில் ரசாயன கழிவுகள், கழிவுநீர் போன்றவை கலப்பதால் அவற்றில் வாழும் மீன்களும், அங்கு வந்து நீர் அருந்தும் வனவிலங்குகளும், பறவைகளும் உயிரிழக்கின்றன. 

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாம்பர் ஏரியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் செத்து மடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தர பிரதேசம், முசாபர்நகர் மாவட்டத்தின் ஹஸ்தினாபூர் பகுதியில் உள்ள கங்கை நதி கால்வாயில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இறந்த மீன்களை யாரோ ஒரு டேங்கரில் கொண்டு வந்து கால்வாயில் கொட்டியிருக்கலாம். மீன்கள் எவ்வாறு இறந்தன? உண்மையான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது’ என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  
மீன்கள் செத்து மிதந்ததால், அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தண்ணீரில் ரசாயனம் கலந்திருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News