செய்திகள்
கோப்புப் படம்

மேற்கு வங்காளத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல்

Published On 2019-12-05 11:28 GMT   |   Update On 2019-12-05 11:28 GMT
மேற்கு வங்காள மாநிலத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மால்டா:

சமீப காலமாக பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது என பலரும் அரசை குறைகூறி வருகின்றனர். கடந்த மாதம் தெலுங்கானாவில் பெண் தாசில்தார் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சமீபத்தில் ஐதராபாத் புறநகர் பகுதியில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் 6 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கக்கோரி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் டெல்லி ஜந்தர் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை அப்பகுதியில் சென்று கொண்டிருந்த உள்ளூர் விவசாயிகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடல் அருகே ஒரு ஜோடி செருப்பும், சில தீக்குச்சிகளும் கிடந்தன. அந்த பெண் கற்பழிக்கப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News