செய்திகள்
உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா - 400 விவசாயிகளுக்கு சிவசேனா அழைப்பு

Published On 2019-11-28 06:50 GMT   |   Update On 2019-11-28 06:50 GMT
உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி 400 விவசாயிகளுக்கு சிவசேனா கட்சி சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி” என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த கூட்டணி சார்பில் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. மாலை 6.40 மணிக்கு உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து உயர்ந்த பதவிக்கு வரும் முதல் நபர் என்ற பெருமையை உத்தவ் தாக்கரே பெற்றுள்ளார்.

1966-ம் ஆண்டு இதே சிவாஜி பூங்கா மைதானத்தில்தான் பால் தாக்கரே சிவசேனா கட்சியைத் தொடங்கினார். எனவே அதே இடத்தில் முதல்-மந்திரியாக பதவி ஏற்பதை உத்தவ் தாக்கரே பெருமையாக கருதுகிறார். அவரது விருப்பப்படி சிவாஜி பூங்கா மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை கோலாகலமாக நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பதவி ஏற்பு விழாவுக்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களை அழைத்து மிக மிக பிரமாண்டமாக நடத்துவதன் மூலம், பா.ஜனதாவுக்கு தங்களது வலிமையை மறைமுகமாக உணர்த்த வேண்டும் என்று சரத்பவாரும், உத்தவ் தாக்கரேயும் முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் பா.ஜனதாவை எதிர்க்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளனர். பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே நேற்று நேரில் சென்று பதவி ஏற்பு விழாவுக்கான அழைப்பிதழைக் கொடுத்தார். ஆனால் சோனியா, ராகுல் இருவரும் மும்பைக்கு வருவார்களா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. பஞ்சாப் முதல்-மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவுக்கு செல்ல இயலாது என்று அறிவித்துள்ளனர்.



தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மும்பை சென்று உத்தவ் தாக்கரே பதவி ஏற்பில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்க உள்ளார். பதவி ஏற்பு விழா இரவு 8 மணி வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதால் அதற்கு ஏற்ப சிவாஜி பூங்கா மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் சுமார் 300 பேர் வரவழைக்கப்பட்டு, சிவாஜி பூங்கா முழுவதும் மின் விளக்கு பொருத்தி சீரமைத்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், தலைவர்கள் சீராக வந்து செல்வதை உறுதிப்படுத்தவும் சுமார் 3 ஆயிரம் போலீசார் சிவாஜி பூங்கா மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். விழாவுக்கு வருபவர்கள் அமர சுமார் 30 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. இத்தகைய ஏற்பாடுகள் காரணமாக சிவாஜி பூங்கா மைதானம் திரும்பிய திசையெல்லாம் விழா கோலமாக காட்சி அளிக்கிறது.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி 400 விவசாயிகளுக்கு சிவசேனா கட்சி சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 400 விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினர் என 700 பேர் வருவார்கள் என்று தெரிகிறது. விவசாயிகள் அமர சிவாஜி பூங்கா மைதானத்தில் தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய மந்திரிசபை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மகாராஷ்டிர மாநிலம் முழுவதிலும் இருந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் மும்பையில் குவிந்தபடி உள்ளனர். அந்த வகையில் 3 கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 50 அயிரம் பேர் சிவாஜி பூங்கா மைதானத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதியத்தில் இருந்தே சிவாஜி பூங்காவுக்கு பொதுமக்கள் வரத் தொடங்கி விட்டனர்.

பதவி ஏற்பு விழா மேடையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள் அமர வேண்டும் என்பதால் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. 140 அடி நீளம், 50 அடி அகலத்தில் அந்த மேடையை பொதுப்பணித்துறை ஊழியர்கள் உருவாக்கி உள்ளனர். சுமார் 300 பேர் அந்த மேடையில் அமர முடியும்.

மூன்று பிரிவாக தலைவர்கள் மேடையில் உட்கார வைக்கப்படுவார்கள். மத்திய பகுதி பிரிவில் கவர்னர் பகத்சிங் கோஷியாரி மற்றும் பதவி ஏற்கும் தலைவர்கள் அமர்வார்கள். அவர்களுக்கு இருபுறமும் 3 கட்சிகளின் மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அமர வைக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே 3 கட்சிகளும் தொண்டர்களை திரட்டுவதால் 3 முதல் 4 லட்சம் பேர் வரை சிவாஜி பூங்கா மைதானத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பதவி ஏற்பு விழாவை குறுகிய நேரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரேயுடன் இன்று 3 கட்சிகளையும் சேர்ந்த தலா 2 பேர் வீதம் 6 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3-ந்தேதிக்குள் சட்டசபையில் உத்தவ் தாக்கரே மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட உள்ளார்.

அதன் பிறகு மகாராஷ்டிர மந்திரிசபையை உத்தவ் தாக்கரே விரிவுபடுத்துவார்.

Tags:    

Similar News