செய்திகள்
சாக்‌ஷி மஹராஜ்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பர் 6-ம் தேதி தொடங்கும் - சாக்‌ஷி மஹராஜ்

Published On 2019-10-26 09:40 GMT   |   Update On 2019-10-26 09:40 GMT
அயோத்தி நிலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நவம்பர் 17-ம் தேதிக்குள் வெளியாகும் நிலையில் அங்கு ராமர் கோவில் கட்டும் பணி டிசம்பர் 6-ம் தேதி தொடங்கும் என சாக்‌ஷி மஹராஜ் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இது தொடர்பாக முதலில் நீண்ட ஆண்டுகளாக அலகாபாத் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்வது தொடர்பாக உத்தரவிடப்பட்டது.
 
ஆனால், அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.



இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது.

அயோத்தி பிரச்சினை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, 40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 1992-ம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே டிசம்பர் 9-ம் தேதி அங்கு ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கும் என உத்தர பிரதேசம் மாநில பாஜக பிரமுகரும் உன்னாவ் தொகுதி எம்.பி.யுமான சாக்‌ஷி மஹராஜ் இன்று தெரிவித்தார்.

உன்னாவ் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாக்‌ஷி மஹராஜ் கூறியதாவது:-

அயோத்தி நகரம்தான் ராமர் பிறந்த பூமி என்பதற்கு தொல்லியல் துறையிடம் பலமான ஆதாரங்கள் உள்ளன.

அயோத்தி நிலம் தொடர்பான விசாரணையை நிறைவுசெய்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியலமைப்பு அமர்வு நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கவுள்ளது. மிகவும் சாதகமான தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அதன் பின்னர், அந்த இடத்தில் முன்னர் இருந்த சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்ட டிசம்பர் 9-ம் தேதி அங்கு பிரமாண்டமான முறையில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கும்.

ஷியா வக்ப் வாரியம் உள்பட பல இஸ்லாமிய அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அங்கு ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News