செய்திகள்
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை

வல்லபாய் பட்டேலின் பாதையை பின்பற்றி பல ஆண்டுகால பிரச்சனையை தீர்த்தோம்: மோடி

Published On 2019-09-17 11:43 GMT   |   Update On 2019-09-17 11:43 GMT
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது சர்தார் வல்லபாய் பட்டேலின் பாதையை பின்பற்றி எடுக்கப்பட்ட முடிவாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்:

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கியது. மேலும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.   

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சொந்த மாநிலமான குஜராத் சென்ற பிரதமர் மோடி, நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார். 

இதையடுத்து, அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள 'Statue of Unity' சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலையை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது கூட்டத்தில் பங்கேற்றார். 

அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னாள் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேலின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பட்டேலின் உத்வேகத்தால்தான் அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 

1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது ஐதராபாத் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக செயல்பட மறுத்தது. அதனால் அப்போதைய உள்துறை மந்திரியாக இருந்த வல்லபாய் பட்டேல் ராணுவத்தின் உதவியுடன் ஐதராபாத்தை இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார். 



ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கம் செய்ததும் பட்டேலின் பாதையை பின்பற்றியே எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த நடவடிக்கையின் மூலம் பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சனைக்கு தீர்வு காண புதிய வழி பிறந்துள்ளது.  

இவ்வாறு அவர் கூறினார்.  
Tags:    

Similar News