செய்திகள்
வித்தியாசமான போட்டி

ராகமாக, சப்தமாக, நீளமாக... உங்கள் திறமையை குஜராத்தில் காட்டலாம் - வாய் மூலமாக அல்ல

Published On 2019-09-16 11:37 GMT   |   Update On 2019-09-16 11:37 GMT
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு உணவகம் வரும் 22-ம் தேதி ‘வாயு உபத்திரவம்’ தொடர்பாக ஒரு வித்தியாசமான போட்டியை வைத்துள்ளது.
அகமதாபாத்:

நான்கைந்து பேர் ஓரிடத்தில் வெகுநேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் திடீரென்று ஒருவித துர்நாற்றத்தால் அனைவரும் சங்கடத்தில் நெளிவதை பார்க்கலாம். அந்த ‘வாயு உபத்திரவம்’ தொடர்பான துர்நாற்றத்துக்கு காரணமானவர் ஒருவராக இருக்கலாம். அவர் யார்? என்பதை கண்டுபிடிப்பது, சீட்டு எழுதிப்போட்டு விளையாடும் ‘திருடன்-போலீஸ்’ ஆட்டத்தைவிட மிக சிக்கலானதாக இருக்கும்.

ஏனென்றால், அங்கு இருக்கும் அத்தனை பேரும் மிக அப்பாவித்தனமாக முகத்தை வைத்திருப்பார்கள். ‘ஊமைத்தனமாக’ பிறரை முகம்சுழிக்க வைத்தவர் யார்? என்பதை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது.

இன்னும் சிலர் இந்த உலகத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பொது இடத்தில்கூட மிகுந்த ஓசையுடன் தங்களது வாயு உபத்திரவத்தை வெளிப்படையாக தீர்த்துக் கொள்வதுண்டு.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ஒரு உணவகம் வரும் 22-ம் தேதி ‘வாயு உபத்திரவம்’ தொடர்பாக ஒரு பெரிய போட்டியை வைத்துள்ளது.


தனது நண்பர் முல் சங்வி என்பவருடன் இணைந்து இந்த போட்டியை அறிவித்துள்ள அந்த உணவகத்தின் உரிமையாளர் யட்டின் சங்கோய், ‘உலகின் பல நாடுகளில் இதுபோன்ற போட்டிகள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் இதுதான் முதல் முறையாகும்.

இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமானவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதற்கான நடுவர்கள் குழுவில் ஒரு டாக்டரும் இடம்பெற்றுள்ளார்.

ஒவ்வொரு போட்டியாளரும் 60 வினாடிகள் தங்களது ‘திறமையை’ வெளிப்படுத்தலாம். ‘மிக நீளமாக’, ‘மிக சப்தமாக’, ‘மிக ராகமாக’ என மூன்று வகையில் நடத்தப்படும் இந்த போட்டியில் மூன்று ‘வெற்றியாளர்கள்’ தேர்வு செய்யப்பட்டு சுழல்கோப்பைகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News