செய்திகள்
பள்ளிக்கல்வி துறை

காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி -பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

Published On 2019-09-16 09:39 GMT   |   Update On 2019-09-16 09:39 GMT
மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தவறானது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிந்ததும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த முறை காந்தியின் 150வது பிறந்ததின விழாவை கொண்டாடும் வகையில், காலாண்டு விடுமுறை நாட்களில் (செப்.24 முதல் அக். 2 வரை) காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை நடத்தும்படி உத்தரவிட்டிருப்பதாகவும், அதனால் காலாண்டு விடுமுறை ரத்து எனவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

காலாண்டு விடுமுறை விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் ஒரு அறிக்கையும் வெளியிடுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக  தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை வெளியிட்டிருந்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் நலன்கருதி முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து பழைய நடைமுறையே தொடர்ந்திட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், காலாண்டு விடுமுறை ரத்து தொடர்பான தகவலை பள்ளிக்கல்வித் துறை மறுத்துள்ளது. ஏற்கனவே அறிவித்த காலாண்டுத் தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறி உள்ளது.

அதேசமயம், காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம். அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம். காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News