செய்திகள்
பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவை குழு

கடல் வழியாக பாகிஸ்தான் ராணுவ குழு இந்தியாவுக்குள் நுழையலாம்? உளவுத்துறை எச்சரிக்கை

Published On 2019-08-29 11:33 GMT   |   Update On 2019-08-29 11:33 GMT
குஜராத் கடல் வழியாக பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவை குழுவினர் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவை குழுவினர் மற்றும் பயங்கரவாதிகள் இணைந்து கடல் வழியாக படகுகளில் குஜராத் மாநிலத்துக்குள் நுழைந்து இந்தியாவில் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றலாம் என உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.



இதையடுத்து, குஜராத் கடல் பரப்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடலோரக் காவல்படை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை ஆகியவை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆனால், பாகிஸ்தானின் ராணுவ சிறப்பு சேவை குழுவினர் 100 பேர் ஏற்கனவே காஷ்மீர் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   
  
Tags:    

Similar News