செய்திகள்
கண்ணன் கோபிநாத்

ராஜினாமா கடிதம் ஏற்கப்படும் வரை பணியில் தொடர ஐஏஎஸ் அதிகாரிக்கு உத்தரவு

Published On 2019-08-29 08:27 GMT   |   Update On 2019-08-29 08:27 GMT
கேரளாவில் கடந்த ஆண்டு வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி சமீபத்தில் ராஜினாமா செய்தார். இந்த கடிதம் ஏற்கப்படும்வரை அவர் பணியில் தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாமன்:

கடந்த ஆண்டு ஏற்பட்ட கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தங்கி தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்த கண்ணன் கோபிநாத் சமீபத்தில் திடீரென ராஜினாமா செய்தார்.

இதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் கண்ணன் கூறுகையில், ‘குரல் இருந்தும் கொடுக்க முடியாதவர்களுக்கு, குரலாக செயல்படவே இப்பணியில் சேர்ந்தேன். ஆனால், என் சொந்த குரலையே இழந்துவிட்டேன். மக்களுக்காக நான் சுதந்திரமாக பணியில் ஈடுபட முடிவதில்லை. இதன் காரணமாகவே ராஜினாமா செய்தேன்.



இதுபோன்ற அமைப்பில் இருந்துக் கொண்டே இந்த அமைப்பை மாற்ற நான் கடும் முயற்சி செய்துவிட்டேன். ஆனால், இந்த அமைப்பு சரியாகும் எனும் நம்பிக்கை இல்லை. தற்போது அரசு ஓய்வு இல்லத்தில் வசிக்கிறேன். அடுத்து எங்கு போக வேண்டும் என தெரியவில்லை. மனைவி வேலை பார்க்கிறார். அவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். பணியில் தொடர விருப்பமில்லை’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்படும்வரை பணியில் தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த நோட்டீஸ் கண்ணன் தங்கியிருக்கும் அரசு ஓய்வு இல்லத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நோட்டீசில் டையு டாமன் பணியாளர்கள் துறை துணை செயலாளர் குர்பிரீத் சிங் கையெழுத்திட்டுள்ளார்.

Tags:    

Similar News