செய்திகள்
சிந்தாமோகன்

ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க முன்னாள் காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்

Published On 2019-08-22 05:36 GMT   |   Update On 2019-08-22 05:36 GMT
ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என அத்தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதி:

ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என அத்தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் 2-ஆக பிரிக்கப்பட்டதையடுத்து ஏற்கனவே தலைநகரமாக இருந்த ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு சென்று விட்டது. இதனால் ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்க திட்டமிடப்பட்டு முந்தைய தெலுங்கு தேசம் அரசால் குண்டூர்- கிருஷ்ணா மாவட்டங்களுக்கு இடையே 33 ஆயிரம் ஏக்கரில் அமராவதி நகரம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் அமராவதி அல்லாமல் வேறு பகுதியை ஆந்திராவின் தலைநகரமாக மாற்ற தற்போதைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆந்திர மாநில நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சத்தியநாராயணா நிருபர்களிடம் கூறியதாவது:-

அமராவதியில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அமராவதியில் உள்ள பல கிராமங்கள் மூழ்கின. மேலும் அமராவதியை தலைநகரத்துக்கு பொருந்தாத பகுதி என ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது.

இதனால் ஆந்திராவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

ராயலசீமா பகுதியில் உள்ள சித்தூர், கடப்பா, அனந்தபூர், கர்னூல் ஆகியவற்றில் ஏதேனும் ஒருபகுதி தலைநகரமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில் திருப்பதியை தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனந்தபூர், கர்னூல், கடப்பா ஆகிய பகுதிகளில் போதிய தண்ணீர் வசதி இல்லை. எனவே அந்த பகுதிகளை தலைநகராக்குவது சிக்கலை ஏற்படுத்தும். ஆதலால் திருப்பதியை தலைநகராக அறிவிக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News