செய்திகள்
கர்நாடகாவில் புதிய மந்திரிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த கவர்னர்

மந்திரிசபையை விரிவாக்கம் செய்தார் எடியூரப்பா- 17 புதிய மந்திரிகள் பதவியேற்பு

Published On 2019-08-20 05:23 GMT   |   Update On 2019-08-20 05:23 GMT
கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா இன்று தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்துள்ளார். மந்திரி சபையில் புதிதாக 17 மந்திரிகள் இணைந்துள்ளனர்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். 

அதனை தொடர்ந்து கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காஷ்மீர் விவகாரம், கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப் போனது. 

இந்த நிலையில் புதிய அரசு அமைந்ததில் இருந்து தனி ஆளாக நிர்வாகத்தை கவனித்து வந்த எடியூரப்பா, 25 நாட்களுக்கு பிறகு தனது மந்திரிசபையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். முதற்கட்டமாக 17 பேர் மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கவர்னர் மாளிகையில் மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. புதிய மந்திரிகளுக்கு கவர்னர் வஜூபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 



ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், ஆர்.அசோகா, கோவிந்த மக்தப்பா கரஜோல், டாக்டர் அஷ்வத் நாராயணா, லக்ஷ்மண் சங்கப்பா சவாதி, பி.ஸ்ரீராமுலு, சுரேஷ் குமார், சோமண்ணா, சி.டி.ரவி, பசவராஜ் பொம்மை, கோட்டா சீனிவாஸ் பூஜாரி, மது சுவாமி, சந்திரகாந்த கவுடா, எச்.நாகேஷ் (சுயேட்சை எம்எல்ஏ), பிரபு சவுகான், சசிகலா ஜோலே ஆகியோர் மந்திரிகளாக பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

புதிதாக மந்திரி பதவியை ஏற்பவர்கள் ஒவ்வொருவருக்கும் 2 அல்லது 3 இலாகாக்கள் ஒதுக்கப்பட உள்ளது. சட்டப்படி கர்நாடக மந்திரிசபையில் முதல்-மந்திரி உள்பட 34 பேர் இடம் பெற முடியும். இப்போது முதல்-மந்திரி உள்பட 18 பேர் மந்திரிசபையில் இடம்பெற்றிருப்பதால், மீதம் 16 இடங்கள் காலியாக உள்ளது.
Tags:    

Similar News