செய்திகள்
காஷ்மீருக்கு 370 மற்றும் 35ஏ

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு வீடுகளில் வசிப்பதில் சிக்கல்

Published On 2019-08-07 05:40 GMT   |   Update On 2019-08-07 05:40 GMT
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இருப்பதால் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு வீடுகளில் வசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்:

முன்னாள் முதல்- மந்திரிகள் போன்ற அரசியல் சாசன ரீதியிலான பதவிகளில் இருந்தவர்களுக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டு வந்தது.

அவர்கள் ஆயுள் முழுவதும் இந்த வீடுகளில் வசிக்கலாம் என்ற நடை முறை இருந்து வந்தது.

ஆனால், இதை எதிர்த்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தீர்ப்பு கூறிய நீதிபதிகள் அரசியல் சாசன பதவிகளில் இருந்தவர்கள் தங்கள் ஆயுட்காலம் முழுவதும் அரசு வீடுகளில் இருக்க முடியாது என்று கூறினார்கள்.

இதனால் முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு 370 சிறப்பு அந்தஸ்து இருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு காஷ்மீருக்கு பொருந்தாது.

எனவே, அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு வீடுகளில் வசித்து வந்தனர். இப்போது 370 பிரிவு ரத்து செய்யப்பட்டு இருப்பதால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு காஷ்மீருக்கும் பொருந்தும்.


இதனால் முன்னாள் முதல்-மந்திரிகள் அரசு வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் முன்னாள் முதல்- மந்திரிகள் மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் ஆகியோர் தற்போது அரசு வீட்டில் உள்ளனர்.

அவர்களுக்காக ஸ்ரீநகர் குப்கார் ரோட்டில் தோட்டங்களுடன் கூடிய பிரமாண்டமான பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்குதான் அவர்கள் நீண்ட காலமாக வசித்து வருகிறார்கள். இதற்கு வாடகை கிடையாது. அங்கு பணியாற்றும் ஆட்களையும் அரசே நியமனம் செய்கிறது.

மெஹபூபா முக்தி, உமர் அப்துல்லா இருவரும் வசிக்கும் வீடுகள் அவ்வப்போது அரசு செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக அவர்கள் இருவரும் முதல்-மந்திரியாக இருந்த காலங்களில் ரூ. 50 கோடி வரை செலவிட்டு இருக்கிறார்கள்.

குலாம் நபி ஆசாத்தும் இதே போல் பல கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார். உமர் அப்துல்லா 2009-ல் இருந்து 2014 வரை முதல்-மந்திரியாக இருந்த போது மட்டுமே ரூ. 20 கோடி செலவிட்டார்.

இத்தனைக்கும் அதே சாலையில் உமர் அப்துல்லா குடும்பத்துக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டில் அவருடைய தந்தையும், முன்னாள் முதல்- மந்திரியுமான பரூக் அப்துல்லா வசிக்கிறார். அவரும் முன்னாள் முதல்- மந்திரி என்ற முறையில் தனது வீட்டை அரசு செலவில் புனரமைத்துள்ளார்.

குடும்ப வீடுகள் அதே பகுதியில் இருந்தும் உமர் அப்துல்லா அரசு வீட்டில் தான் இப்போதும் வசித்து வருகிறார்.

370 சட்டம் ரத்து ஆனதால் மெஹபூபா முக்தி, உமர் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் 3 பேருமே அரசு வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News