செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகாவில் 60 பேர் மந்திரி பதவி கேட்கிறார்கள் - எடியூரப்பாவுக்கு நெருக்கடி

Published On 2019-08-03 07:14 GMT   |   Update On 2019-08-03 08:52 GMT
கர்நாடகாவில் 60 பேர் மந்திரி பதவி கேட்பதால் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி அரசை பாரதிய ஜனதா கவிழ்த்தது.

இதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பாரதிய ஜனதா புதிய ஆட்சி அமைத்துள்ளது.

குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ், ஜனதாதளம், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தங்கள் பக்கம் இழுத்ததன் மூலம் ஆட்சியை கவிழ்த்தார்கள்.

அவர்களில் 17 பேர் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் பறித்து விட்டார். இவர்கள் 18 பேருக்கும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பாரதிய ஜனதா சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

அதில், அவர்களுக்கு மந்திரி பதவி தருவதாக அளித்த வாக்குறுதியும் ஒன்று. பாரதிய ஜனதா பதவி ஏற்ற போது, எடியூரப்பா மட்டும்தான் பதவி ஏற்று கொண்டார்.

 


 

இதைத்தொடர்ந்து மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அதில், அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.

இவர்களில் 17 பேர் எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் பறித்ததுடன் இந்த சட்டசபை காலம் முடியும் வரை மீண்டும் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவதற்கும் தடை விதித்தார்.

எனவே, அவர்களுக்கு மந்திர பதவி கொடுத்தாலும் எம்.எல்.ஏ. ஆக முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது. அவர்கள் அனைவரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் ஒரு முடிவு வந்த பிறகு மந்திரி பதவி கொடுக்கலாம் என எடியூரப்பா கருதினார். ஆனால், அவர்கள் அனைவருமே இப்போதே மந்திரி பதவி வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

அவர்களில் 13 பேருக்கு மந்திரி பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

கர்நாடகாவில் மொத்தம் 33 மந்திரிகளை நியமிக்க முடியும். அதில் எடியூரப்பாவை தவிர்த்து 32 மந்திரிகளை நியமிக்க வேண்டும். அதில், 13 மந்திரி பதவிகள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சென்று விட்டால் 19 பதவிகள் உள்ளன.

ஆனால், பாரதிய ஜனதாவில் ஏராளமானோர் மந்திரி பதவி வேண்டும் என்று கேட்கிறார்கள். எதிர் அணியில் இருந்து வந்தவர்களுடன் சேர்த்து சுமார் 60 பேர் வரை மந்திரி பதவி கேட்கிறார்கள்.

எனவே, என்ன செய்வது என்று தெரியாமல் எடியூரப்பா தவிக்கிறார். அவர் 6-ந்தேதி மந்திரிகள் பட்டியலுடன் டெல்லி செல்ல இருக்கிறார். மேலிட தலைவர்களுடன் கலந்தாலோசித்து அது இறுதி செய்யப்படும்.

ஜாதி வாரியாக, பிராந்தியம் வாரியாக மந்திரி பதவி கொடுக்க வேண்டி உள்ளது. எதிர் அணியில் இருந்து வந்தவர்களுக்கு மந்திரி பதவி கொடுப்பதால் அதை சரியாக பிரித்து கொடுப்பதில் சிக்கல் இருக் கிறது.

பாரதிய ஜனதாவில் மொத்தம் உள்ள 105 எம்.எல்.ஏ.க்களில் 29 பேர் ஏற்கனவே மந்திரியாக இருந்தவர்கள். 22 எம்.எல்.ஏ.க்கள் 3 அல்லது 4 தடவை தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். அவர்கள் அனைவருமே மந்திரி பதவி கேட்கிறார்கள்.

லிங்காயத், ஒக்காலிக்கா சமூகத்தினர் அதிக அளவில் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். அவர்களுக்கு அதிக அளவில் பதவி கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் யாருக்கு மந்திரி பதவி கொடுப்பது? என்பதில் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் எடியூரப்பா தவித்து வருகிறார்.

அப்படியே எடியூரப்பா மந்திரியை தேர்வு செய்தாலும் அதை கட்சி மேலிடம் ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வியும் இருக்கிறது.

ஏனென்றால், எடியூரப்பா புதிய சபாநாயகராக வேறு ஒரு நபரை நியமிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், கட்சி மேலிடம் விஸ்வேஸ்வர் ஹெக்டேவை சபாநாயகராக நியமிக்க கூறியது.

எனவே, அவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதேபோல் எடியூரப்பா கொடுக்கும் மந்திரிகள் பட்டியலை அப்படியே மேலிடம் ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது.

இதனால் மந்திரிசபை விரிவாக்கத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிய ஜனதா முக்கிய தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், ஈஸ்வரப்பா, அசோக் ஆகியோர் மந்திரி ஆகிறார்கள். அவர்களுக்கு முதன்மை இலாகாக்கள் ஒதுக்கப்படஇருக்கின்றன.

ஜெகதீஷ் ஷெட்டருக்கு வருவாய் துறையும், ஈஸ்வரப் பாவுக்கு உள்துறையும், அசோக்குக்கு பெங்களூரு வளர்ச்சித்துறையும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News