செய்திகள்
கைது

ரூ.1640 கோடி மோசடி செய்த பெங்களூரு நகைக்கடை அதிபர் கைது

Published On 2019-07-19 05:03 GMT   |   Update On 2019-07-19 08:10 GMT
ரூ.1640 கோடி மோசடி வழக்கில் தொடர்புடைய பெங்களூரு நகைக்கடை அதிபர் மன்சூர் கான் துபாயில் இருந்து டெல்லி வந்தபோது கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான்.

இவர் கர்நாடகம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்தார். இவரை நம்பி ஏராளமானோர் பணம் கட்டினார்கள். ரூ. 1,640 கோடி வரை வசூலித்து மோசடி செய்து விட்டு துபாய் தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து கர்நாடக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும், அமலாக்க துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர். துபாயில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெறுவது தெரியவந்தது.

இது தொடர்பாக லுக்அவுட் நோட்டீசை மத்திய அமலாக்க துறையினர் பிறப்பித்து இருந்தனர். இந்நிலையில் துபாயில் இருந்து புறப்பட்ட மன்சூர் கான் இன்று அதிகாலை டெல்லி வந்தார். 

டெல்லி விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கியதும் அவரை மத்திய அமலாக்க துறையினர் மற்றும் சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அவர் பெங்களூரு அழைத்துவரப்பட்டு அங்கும் விசாரணை நடைபெற உள்ளது.

ஏற்கனவே பெங்களூருவில் உள்ள மன்சூர்கானின் சொத்துக்களை கர்நாடக சிறப்பு புலனாய்வு போலீசார் முடக்கி வைத்து உள்ளனர். மன்சூர்கானிடம் விசாரணை நடத்திய பிறகு அவரது சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.

கைதான மன்சூர்கான் ஏற்கனவே பல வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரிடம் ரூ. 400 கோடி கொடுத்து ஏமாந்ததாக கூறி இருந்தார். அவர் கைதானதை தொடர்ந்து கர்நாடகாவை சேர்ந்த அரசியல்வாதிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News