செய்திகள்
மாணவர்கள் ஆசிரியருடன் எடுத்துக் கொண்ட செல்பி

குரு பூர்ணிமா கொண்டாட்டம்: ‘செல்பி வித் குரு’ மாணவர்களிடம் நல்ல வரவேற்பு

Published On 2019-07-17 10:15 GMT   |   Update On 2019-07-17 10:15 GMT
குரு பூர்ணிமா நாளில் நமக்கு வழிகாட்டும் குருமார்களுடன் செல்பி எடுத்துக் கொண்டாடுமாறு மத்திய மேம்பாட்டு மனித வள அமைச்சகம் கேட்டுக் கொண்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
புது டெல்லி:

ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமியானது குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தனக்கு கல்வி புகட்டிய, வழிகாட்டிய குருமார்களை போற்றும் விதமாக குரு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

குருவை வணங்கி ஆசி பெறுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவது மரபு.



அவ்வகையில் இந்த ஆண்டிற்கான குரு பூர்ணிமா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதனை கொண்டாடும் விதமாக, பல கல்லூரிகளில் செல்போன்கள் தடை செய்யப்பட்டிருந்தபோதும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மாணவர்களை தங்கள் ஆசிரியர்களுடன் செல்பி எடுத்து #SelfieWithGuru எனும் ஹேஷ்டாக்கில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டது.



இது தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கான மானியக் குழு அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. இதையடுத்து பல்வேறு கல்லூரி மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு பகிர்ந்தனர். இதேபோல் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டு குரு பூர்ணிமாவை கொண்டாடினர்.






Tags:    

Similar News