செய்திகள்
கர்நாடக சட்டசபை

கர்நாடக சட்டசபையில் 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு- சபாநாயகர் அறிவிப்பு

Published On 2019-07-15 08:57 GMT   |   Update On 2019-07-15 08:57 GMT
கர்நாடக சட்டசபையில் அரசு மீது வரும் 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கூட்டணி கட்சியில் இருந்த 16 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்து கவிழும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

குமாரசாமியும், காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற ஒரு வாரமாக தீவிரமாக போராடி வருகிறார்கள். சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்காததால் குமாரசாமி அரசு தப்பி பிழைத்து வருகிறது. இதை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



இது ஒருபுறமிருக்க முதல்-மந்திரி குமாரசாமி சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்று சவால் விடுத்திருந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்து மீண்டும் அழைத்து வந்து விடலாம் என்று குமாரசாமி மலைபோல் நம்பி இருந்தார். ஆனால் அவரது நம்பிக்கை நேற்று இடிந்து தகர்ந்து நொறுங்கிப் போனது. அவரது சமரச முயற்சிகள் ஒன்று கூட வெற்றி பெறவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக சட்டசபை இன்று கூடியது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்கவில்லை. எம்எல்ஏக்களின்  ராஜினாமா தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கியபிறகே, நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி முடிவு செய்வதாக கூறினார். எனவே, எம்எல்க்களின் அமளி நீடித்தது. இதனால் சட்டசபை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக சட்டசபையில் 18-ம் தேதி (வியாழக்கிழமை) அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். எனவே, வியாழக்கிழமை குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குள், அதிருப்தி எம்எல்ஏக்கள் மனம் மாறி அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வருவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Tags:    

Similar News