செய்திகள்
மக்களவை

கர்நாடக அரசியல் குழப்பம்- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு

Published On 2019-07-10 07:57 GMT   |   Update On 2019-07-10 07:57 GMT
கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள் பின்னர் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:

கர்நாடகாவில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசின் மீது அதிருப்தியில் உள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் 13 பேர் சமீபத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அவர்களின் ராஜினாமா சபாநாயகரால் ஏற்கப்படவில்லை. எனினும் அவர்கள் பதவி விலகுவதில் உறுதியாக உள்ளனர். அவர்களை சமாதானம் செய்ய கட்சி  தலைமை தொடர்ந்து முயற்சி மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை.

ஆளும் கூட்டணி கட்சியினரிடையே கிளர்ச்சியை தூண்டிவிட்டதாகவும், எம்எல்ஏக்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது. ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் 10 பேர் மும்பை ஓட்டலில் தொடர்ந்து முகாமிட்டிருப்பதால், கர்நாடக அரசியல் குழப்பம் முடிவுக்கு வராமல் இழுபறி நீடிக்கிறது.



இந்த விவகாரத்தை முன்வைத்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் மீண்டும் இப்பிரச்சினையை எழுப்பினர். அப்போது, கர்நாடக அரசை கலைக்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி, முழக்கமிட்டனர்.

ஆனால், மத்திய அரசு தரப்பில் இந்த விஷயத்தில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
Tags:    

Similar News