செய்திகள்
பிரதமர் மோடி- கீதா ரபரி

நாட்டுப்புறப் பாடகி கீதா ரபரி பிரதமருக்கு அர்ப்பணித்த பாடல் -வாழ்த்திய மோடி

Published On 2019-07-09 03:43 GMT   |   Update On 2019-07-09 03:43 GMT
குஜராத் நாட்டுப்புறப் பாடகி கீதா ரபரி பிரதமர் மோடிக்கு தனது பாடல் ஆல்பத்தை நேரில் சென்று அர்ப்பணித்தார். இதனையடுத்து அவரை பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
புது டெல்லி:

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கீதா ரபரி. இவர் குஜராத் நாட்டுப்புற இசை பாடல்கள் பாடும் பாடகி ஆவார். இவர் பல்வேறு கச்சேரிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸ் பிரமுகர் அல்பேஷ் தாகூர் பாடன் பகுதியில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அந்நிகழ்ச்சியில்  கீதா ரபரி இசை கச்சேரி நடத்தினார்.

கீதா, பாடிக்கொண்டிருக்கும் போது தாகூர் பண நோட்டுகளை வீசி எறிந்தார். பணம் மழை போல் பொழிய தொடங்கியது. இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. இதேபோல் கீதாவின் பாடலுக்கு பல்வேறு தரப்பு மக்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 



இந்நிலையில் கீதா, தான் பாடிய பாடல் ஆல்பத்தினை பிரதமர் மோடிக்கு அர்ப்பணித்துள்ளார். இதற்காக பிரதரை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது கீதா ரபரி, பள்ளி ஆண்டு விழா ஒன்றில் கலந்துக் கொண்டதாகவும், அதில் பங்கேற்ற மோடி ரூ.250 கொடுத்து தன்னை கவுரவித்ததாகவும் கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், 'கீதா ரபரி போன்ற மக்கள் நம் சமூகத்திற்கு முன்னோடியாக திகழ்கின்றனர். அர்ப்பணிப்பு உணர்வோடு அவர் பாடும் திறமை பெற்றுள்ளது மிகவும் சிறப்பு மிக்கது.

இளைஞர்கள் மத்தியில் குஜரத்தின் நாட்டுப்புற இசையை கீதா கொண்டு சேர்ப்பதை கண்டு ஈர்க்கப்பட்டுள்ளேன். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்' என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News