செய்திகள்

பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது

Published On 2019-06-24 10:12 GMT   |   Update On 2019-06-24 10:12 GMT
ஒடிசா மாநிலத்தில் இளநிலை பொறியாளர் ஒருவரை பொதுமக்கள் மத்தியில் தோப்புகரணம் போட வைத்த எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில், பட்நாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளரை, தொகுதி எம்எல்ஏ சரோஜ் குமார் மெஹர் திட்டி தோப்புக்கரணம் போட வைக்கிறார். பொறியாளரும் அவர் பேச்சைக் கேட்டு தோப்புக்கரணம் போடுகிறார்.

எம்எல்ஏவின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து விசாரணை நடத்தும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். விசாரணையில், தரமற்ற சாலைப் பணி தொடர்பாக புகார் வந்ததால், நேரில் வந்து ஆய்வு செய்த எம்எல்ஏ ஆத்திரத்தில் அந்த பொறியாளரை திட்டி தோப்புக் கரணம் போட வைத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் ஜூன் 5-ம் தேதி நடந்துள்ளது.


இதையடுத்து எம்எல்ஏவை போலீசார் அழைத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எம்எல்ஏ சரோஜ் குமார் மெஹர், பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

தனது செயலுக்காக எம்எல்ஏ ஏற்கனவே மன்னிப்பு கேட்டுள்ளார். மக்களின் கோபத்தை தணிப்பதற்காக பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News