செய்திகள்

பீகாரில் மூளை காய்ச்சலுக்கு 108 பேர் மரணம்- முதல் மந்திரி நிதிஷ் குமார் மருத்துவமனையில் ஆய்வு

Published On 2019-06-18 06:04 GMT   |   Update On 2019-06-18 06:04 GMT
பீகாரில் மூளை காய்ச்சல் நோய்க்கு இதுவரை 108 குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில், முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
முசாபர்பூர்:

பீகார் மாநிலம் முசாபர்நகரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது. கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்நோய் கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதில், கடந்த மாதத்தில் 11 பேர் வரை உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் 41 ஆக உயர்ந்தது. அதன்பிறகு முசாபர்பூர் மாவட்டத்தில் மேலும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பீகாரின் முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது.  ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.



நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  நேற்றுவரை 100 பேர் பலியாகியிருந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் மட்டும் 89 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில்,  ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் நேரில் ஆய்வு நடத்தினார்.  நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு அவர் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News