செய்திகள்

இந்திய விமானத்தின் டயர் நடுவானில் வெடித்தது - அதிர்ஷ்டவசமாக 195 பேர் உயிர் தப்பினர்

Published On 2019-06-13 04:18 GMT   |   Update On 2019-06-13 04:18 GMT
இந்திய விமானத்தின் டயர் திடீரென நடுவானில் வெடித்ததால் அந்த விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
ஜெய்ப்பூர்:

துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நோக்கி இந்திய விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 189 பயணிகள், 6 விமான ஊழியர்கள் இருந்தனர்.

திடீரென நடுவானில் விமானத்தின் ஒரு டயர் வெடித்தது. இதனால் விமானம் லேசாக குலுங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமானி உடனடியாக ஜெய்ப்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்நிலையில் அந்த விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. டயர் வெடித்திருந்த நிலையிலும் விமானத்தை சாமர்த்தியமாக விமானி தரையிறக்கியதால் 195 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இறக்கி அழைத்துச் சென்றனர். அதிக எடையை சுமந்து கொண்டு விமானம் புறப்பட்டதால் அழுத்தம் காரணமாக விமானத்தின் டயர் வெடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது குறித்து பயணிகள் கூறுகையில், “விமானத்தின் டயர் வெடித்தது குறித்து விமானம் தரையிறங்குவது வரை எங்களுக்கு தெரியாது. விமான நிலையத்தில் இறங்கியபோது தான் ஏதோ விபரீதம் நடக்க இருந்தது தெரியவந்தது” என்றனர்.

Tags:    

Similar News