செய்திகள்

ஒடிசாவில் பானி புயல் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

Published On 2019-05-05 10:14 GMT   |   Update On 2019-05-05 11:38 GMT
ஒடிசா மாநிலத்தை அசுர வேகத்தில் தாக்கி துவம்சம் செய்த பானி புயலின் தாக்கத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. #Fanitoll #FanihitsOdisha #CycloneFani
புவனேஸ்வர்:

வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது.

அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.



நவீன கருவிகள் மூலம் பானி புயலின் பயணப் பாதையை மிக துல்லியமாக கணித்து இருந்ததால் அது செல்லும் பகுதிகளில் இருந்து சுமார் 12 லட்சம் மக்களை ஒடிசா மாநில அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தது. இந்த முன் எச்சரிக்கை காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி பானி புயலின் தாக்கத்துக்கு 29 பேர் உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். விழுந்த மரங்களுக்கு பதிலாக போர்க்கால அடிப்படையில் புதிய மரங்கள் நடப்படும் என அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று தெரிவித்துள்ளார். #Fanitoll  #FanihitsOdisha #CycloneFani
Tags:    

Similar News