செய்திகள்

ஆந்திர முதல்வர் மீது நிச்சயம் வழக்கு தொடருவேன்- பீடாதிபதி அறிவிப்பு

Published On 2019-02-19 09:26 GMT   |   Update On 2019-02-19 09:26 GMT
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடர்வது நிச்சயம் என ஸ்ரீ சாரதா பீடாதிபதி சுவரூபானந்தா சுவாமிகள் அறிவித்துள்ளார். #AndraPradeshCM #ChandrababuNaidu #Swaroopanandha
குண்டூர்:

விசாகப்பட்டினத்தில் உள்ள  ஸ்ரீ சாரதா பீடத்தின் பீடாதிபதி சுவரூபானந்தா சுவாமிகள் ஆவார். இவர் குண்டூரில் உள்ள சமேத வெங்கடேஸ்வர சுவாமி தேவஸ்தான பிரம்மோற்சவத்தில் பங்கேற்றார். அப்போது  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிலங்களை சிலர் அபகரித்தும், ஆக்கிரமித்தும் வருகின்றனர். இதேபோன்று ஆந்திராவிலும் ஊழல் அதிகரித்து விட்டது. இதனால், நான் விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெற ராஜசியாமளா யாகம் நடத்த உள்ளேன். சமீபத்தில் நான் தெலுங்கானாவில் மீண்டும் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க வேண்டுமென யாகம் செய்தேன். அதனால்தான் அவர் மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. இது குறித்து விரைவில் வெளிப்படுத்துவேன். திருப்பதி தேவஸ்தான நிலங்கள் அபகரிக்கப்படுவது தெரிந்தும், ஆந்திர அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதையடுத்து தேவஸ்தானம் மீதும், முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் நிச்சயம் வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பீடாதிபதியின் அறிவிப்பினைக் கேட்டு தெலுங்கு தேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்மீகவாதிக்கு அரசியல் தேவையா? ஒருவேளை அரசியலில் ஈடுபட வேண்டுமென எண்ணம் இருந்தால் பீடாதிபதி பதவியை விட்டு விலகி, தேர்தலில்  போட்டியிட வேண்டும் என்பது போல பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  #AndraPradeshCM  #ChandrababuNaidu #Sivaroopanandha

Tags:    

Similar News