செய்திகள்

170 செ.மீ. தலைமுடி வளர்த்து குஜராத் இளம்பெண் சாதனை

Published On 2018-12-26 08:31 GMT   |   Update On 2018-12-26 10:16 GMT
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண் 170 செ.மீ. நீளத்திற்கு தலை முடி வளர்த்து 2019-ம் ஆண்டுக்கான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளார். #NilanshiPatel
ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்தவர் நிலன்ஷி படேல்.

16 வயதாகும் இவர் தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் சிறுவயதில் இருந்தே ஆர்வமுடன் இருந்தார்.

தலைமுடியை பராமரிப்பதற்காக பிரத்யேகமாக அவர் நேரத்தை செலவிட்டார். மேலும் தலைமுடி நீளமாக வளர்வதற்கான முயற்சிகளையும் செய்தார்.

இதன் காரணமாக அவரது தலைமுடி நீளமாக வளர்ந்தது. தற்போது அவரது தலைமுடியின் நீளம் 170.5 சென்டி மீட்டர் (5 அடி 7 அங்கலம்) ஆகும்.

170 செ.மீட்டர் நீளமுள்ள தலைமுடியை வளர்த்து இருப்பதால் நிலன்ஷி புதிய சாதனையை படைத்து உள்ளார். அவரது இந்த சாதனை 2019-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

இதற்கு முன்பு அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஏபிரில் என்ற பெண்ணின் 152.5 சென்டி மீட்டர் நீளமுள்ள தலைமுடிதான் சாதனையாக இருந்தது. பிறகு அந்த சாதனையை கெயிட்டோ என்ற பெண் 155.5 சென்டி மீட்டர் நீள தலைமுடி வளர்த்து முறியடித்தார்.


தற்போது இந்த 2 சாதனைகளையும் குஜராத் பெண் நிலன்ஷி முறியடித்து புதிய உலக சாதனை படைத்து இருக்கிறார்.

நிலன்ஷியின் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தக தயாரிப்பாளர்கள் அங்கீகரித்து உள்ளனர். இதற்காக சமீபத்தில் நிலன்ஷி இத்தாலி சென்று அங்கீகார கடிதத்தை பெற்று வந்தார்.

பிளஸ்-1 படிக்கும் நிலன்ஷி பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். இதனால் அவளை மகன் போல அவரது பெற்றோர்கள் வளர்த்து வந்தனர். 6 வயதுக்கு பிறகுதான் நிலன்ஷி தனது தலைமுடியை வளர்க்க தொடங்கினார்.

11 ஆண்டுக்குள் நிலன்ஷி தனது தலைமுடியை மிக நீளமாக வளர்த்து உலக சாதனை படைத்து உள்ளார். #NilanshiPatel
Tags:    

Similar News