செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையான இந்தியருக்கு எல்லையில் நெகிழ்ச்சியான வரவேற்பு

Published On 2018-12-18 13:18 GMT   |   Update On 2018-12-18 13:18 GMT
பாகிஸ்தான் சிறையில் ஆறாண்டுகள் தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான இந்தியரை அவரது குடும்பத்தினர் வாகா எல்லையில் கட்டித்தழுவி ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். #Pakistanreleases #Indianprisoner #HamidNihalAnsari
சண்டிகர்:

மும்பை நகரை சேர்ந்தவர் ஹமித் நிஹால் அன்சாரி(33). சமூக வலைத்தளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டு பெண்ணை காதலித்துவந்த அன்சாரி ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக கடந்த 2012-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் அடைக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு உளவு பார்ப்பதற்காக உரிய ஆவணங்கள் ஏதுமின்றி தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக அன்சாரி மீது பெஷாவர் நகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

போலி அடையாள அட்டையுடன் பாகிஸ்தானுக்குள் நுழைந்த குற்றத்துக்காக இந்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, கடந்த 15-12-2015 அன்று அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனை காலம் முடிவடைந்தும் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை.

அன்சாரி தொடர்பான ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்படாததால் அவரை விடுதலை செய்யாமல் இருப்பதாக தெரிவித்த பெஷாவர் சிறைத்துறை அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்றுகொள்ள பெஷாவர் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

அன்சாரியை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பெஷாவர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டிருந்தது.

ஹமித் நிஹால் அன்சாரி நேற்று விடுதலை செய்யப்பட்டதாகவும், அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும் பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை ஒட்டியுள்ள வாகா எல்லைப்பகுதி வழியாக அழைத்து வரப்பட்ட ஹமித் நிஹால் அன்சாரி இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.



அன்சாரியின் வருகைக்காக பலமணி நேரத்துக்கு முன்னதாகவே காத்திருந்த அவரது தந்தையும் குடும்பத்தாரும் அவரை ஆனந்த கண்ணீருடன் கட்டித்தழுவி நெகிழ்ச்சியுடன் வரவேற்று தங்களது இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். #Pakistanreleases #Indianprisoner #HamidNihalAnsari
Tags:    

Similar News