செய்திகள்

உ.பி.யில் ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு- பிரதமர் மோடி இரங்கல்

Published On 2018-10-10 02:43 GMT   |   Update On 2018-10-10 09:34 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #UPTrainDerailed #TrainAccident #PMModi
ரேபரேலி:

மேற்கு வங்காள மாநிலம் மால்டா நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக டெல்லிக்கு ‘நியூ பராக்கா எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று இரவு புறப்பட்டது.

இன்று காலை 6.05 மணிக்கு உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஹர்சந்த்பூர் ரெயில்நிலையம் அருகே வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீர் என்று ரெயில் தடம் புரண்டது.

என்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 9 பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பயணிகள் பலத்த அடிபட்டு இறந்தனர். மேலும் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினரும் மருத்துவ குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர்.

விபத்து காரணமாக அந்த வழியில் செல்லும் மற்ற ரெயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் ரெயில்கள் பல மணிநேரம் தாமதமாக சென்றன.


ரெயில் விபத்து நடந்த இடத்தை ரெயில்வே போர்டு சேர்மன் அஸ்வனி லோகனி பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிக்கு உதவ தேசிய பேரிடர் மீட்பு குழுவையும் அனுப்பி வைத்தார்.

ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஹர்சந்த்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தவறான வழியில் ரெயில் திருப்பிவிடப்பட்டதே காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #UPTrainDerailed #TrainAccident
Tags:    

Similar News