செய்திகள்

நிகழாண்டில் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில் சிக்கி 993 பேர் பலி - உள்துறை அமைச்சகம் அறிக்கை

Published On 2018-08-27 01:27 GMT   |   Update On 2018-08-27 01:56 GMT
நிகழாண்டில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி :

கேரளா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 993 ஆக அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலான்மை பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 17 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ள கேரளாவில் 387 பேர் உயிரிழந்துள்ளனர், அதற்கு அடுத்தபடியாக உத்திரப்பிரதேசத்தில் 204 பேர், மேற்கு வங்காளத்தில் 195 பேர், கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்களில் முறையே 161 பேர் மற்றும் 46 பேர் வெள்ளம் தொடர்பான பேரிடரில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும், மாநிலங்கள் ஒவ்வொரு இயற்கைப் பேரழிவுக்கும் பின்னர் நிவாரண நிதியை செலவிடுவதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்களில் பேரிடர்கால ஆபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு என தனியாக நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



கடந்த ஆண்டில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200, அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 514 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News