செய்திகள்

நவம்பர் மாதம் வரை தலிபான்களுடன் போர் நிறுத்தம் - ஆப்கானிஸ்தான் அதிபர் அறிவிப்பு

Published On 2018-08-20 11:05 GMT   |   Update On 2018-08-20 11:05 GMT
உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுடன் நவம்பர் வரை 3 மாதகால போர் நிறுத்ததுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அழைப்பு விடுத்துள்ளார். #Afghanpresident #Afghanceasefire #Talibanceasefire
காபுல்:

இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூன் மாதம் ரம்ஜான்  முன்னிட்டு 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்டு தலிபான்களும் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். அதன் பின்னர் சுமார் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்ட போர்நிறுத்ததை தலிபான்கள் மீறியதால் அவர்களுக்கு எதிரான தாக்குதல்களை அரசுப்படைகள் தீவிரப்படுத்தின.

நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான்கள் கஸ்னி நகரை கைப்பற்றுவதற்காக கடந்த 15 நாட்களாக ஆவேசமாக போரிட்டு வருகின்றனர். இந்த நகரம் அவர்கள் கையில் சிக்காமல் இருப்பதற்காக அரசுப் படையினரும் தீவிரமான எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இருதரப்பு மோதல்கள் கடந்த புதன்கிழமை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இன்றிலிருந்து (20-ம் தேதி)  முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாதுன்நபி விழா (நவம்பர் மாதம் 21-ம் தேதி) வரை இந்த போர்நிறுத்தம் அமலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆப்கானிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் தோன்றி இந்த அறிவிப்பை வெளியிட்ட அவர், ‘மதத் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் இயக்க தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது’ என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மக்கள் விருப்பத்தை தலிபான் தலைவர்கள் மதிப்பளித்து இந்த போர்நிறுத்தத்தை வரவேற்க வேண்டும். இஸ்லாமிய கொள்கைகளையொட்டி அமைதி பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயராக இந்த போர்நிறுத்தம் வகை செய்யும் என நம்புகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தலிபான்களுக்கு ஆயுதங்களும், பதுங்குமிடமும் தந்து ஆதரித்து வருவதாக கூறப்படும் பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் சர்வதேச ராணுவமான நேட்டோ ஆகியவை இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. #Afghanpresident #Afghanceasefire #Talibanceasefire
Tags:    

Similar News