செய்திகள்

கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி

Published On 2018-08-16 01:01 GMT   |   Update On 2018-08-16 01:01 GMT
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFlood #NarendraModi
புதுடெல்லி :

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன.

தொடர் மழை மற்றும் அணைகளிலிருது வெளியாகும் தண்ணீர் காரணமாக கண்ணூர், கோழிக்கோடு மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

வெள்ளம், நிலச்சரிவு போன்ற மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் நேற்று மட்டும் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. இடுக்கி, முல்லைப்பெரியாறு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தை சூழ்ந்துள்ளது.

ஓடுபாதை மற்றும் சுற்றுவட்டார இடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதால் விமான நிலையம் 18–ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

எதிர்பாராத கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என மோடி குறிப்பிட்டுள்ளார். #KeralaRains #KeralaFlood #NarendraModi
Tags:    

Similar News