செய்திகள்

தந்தையிடம் இருந்து ரூ.46 லட்சம் திருடி நண்பர்களுக்கு கிப்ட் கொடுத்த பாசக்கார மாணவன்

Published On 2018-08-12 04:26 GMT   |   Update On 2018-08-12 04:26 GMT
நண்பர்கள் தினத்தை ஒட்டி தனது தந்தை வைத்திருந்த ரூ.46 லட்சத்தை எடுத்து பள்ளி நண்பர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு மாணவன் அள்ளிக்கொடுத்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபால்புர் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் நபரின் மகன் சமீபத்தில் வித்தியாசமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளார். 

தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூ.60 லட்சம் பணத்தில் ரூ.46 லட்சம் திருடிய அந்த மாணவன், தனது பள்ளி மற்றும் டியூசன் நண்பர்களுக்கு நண்பர்கள் தினத்தை ஒட்டி பரிசுகளை அள்ளி கொடுத்துள்ளார். தினக்கூலி ஒருவரின் மகனுக்கு ரூ.15 லட்சம், தனது வீட்டுப்பாடத்தை முடிக்க உதவி செய்த நண்பனுக்கு ரூ.3 லட்சம் என வாரி இறைத்துள்ளார்.

வெறுங்கையோடு அனைவரும் போய் விடக்கூடாது என்பதற்கான வகுப்பில் உள்ள அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வாங்கி பரிசளித்துள்ளார். மேலும், டியூசன் நண்பர்கள் அனைவருக்கும் வெள்ளி கைசெயின் வாங்கி கொடுத்து தனது அன்பை காட்டியுள்ளார்.

இவரிடம் பரிசாக பெற்ற தொகையில் ஒரு மாணவன் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். பீரோவில் இருந்த பணத்தை காணாததால் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். வெளியில் இருந்து யாரும் திருடிய தடயங்கள் இல்லாததால் போலீசார் வீட்டில் உள்ள நபர்களை சந்தேக வளையத்தில் கொண்டு வந்தனர்.

அப்போதுதான், வாரி வழங்கிய வள்ளளின் செயல்பாடுகள் பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த மாணவனிடம் பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும் பட்டியல் போட்டு அவர்களிடம் இருந்த பரிசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரூ.15 லட்சம் பரிசாக பெற்ற மாணவன் மட்டும் தற்போது தலைமறைவாக உள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News