செய்திகள்

பிரசவ ஆபரேஷனுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தேவை என்றவருக்கு சுப்ரீம் கோர்ட் ரூ.25 ஆயிரம் அபராதம்

Published On 2018-08-03 09:58 GMT   |   Update On 2018-08-03 09:58 GMT
பிரசவத்தின்போது சிசேரியன் ஆபரேஷன் செய்வதற்கு அவசியமான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு சுப்ரீம் கோர்ட் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது. #SCcesareandeliveries #SCdismissesplea #cesareandeliveriesguidelines
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் ரீபக் கன்சால் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். நாடு முழுவதும் பல தனியார் மருத்துவமனைகள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பிரசவத்துக்கு வரும் பெண்களுக்கு தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன்களை செய்து குழந்தைகளை வெளியே எடுப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.



இதற்கென சில கோட்பாடுகள் இல்லாததால் இதில் பல விதிமீறல்கள் நடக்கின்றன. அவசியமான மருத்துவ காரணங்களுக்காக இல்லாமல் இதுபோல் நடைபெறும் ஆபரேஷன்களால் பிரசவித்த பெண்கள் அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்க நேர்வதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்த ரீபக் கன்சால், அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளில்தான் இதுபோன்ற ஆபரேஷன்கள் மிகமிக அதிகமாக நடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

உரிய மருத்துவ அவசியம் ஏற்பட்டால்தான் இதுபோன்ற சிசேரியன் ஆபரேஷன்கள் செய்யப்பட வேண்டும் என்னும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையையும் தனது மனுவில் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

எனவே, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் மூலம் நடைபெறும் பிரசவங்கள் தொடர்பாக கண்காணிக்க ஒரு மருத்துவ வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பானுமதி,  நவின் சின்ஹா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை இந்த கோர்ட் பரிசீலனை செய்தது. உங்களுக்கு என்ன வேண்டும்? சிசேரியன் பிரசவங்கள் எப்படி நடக்க வேண்டும் என்று இந்த கோர்ட் வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து தர வேண்டுமா? இதற்கு எவ்வளவு பணம் தருவீர்கள்? இது ஒரு பொதுநல மனுவா? என்று மனுதாரரை பார்த்து சரமாரியாக நீதிபதிகள் கேள்வி கணைகளை தொடுத்தனர்.

உங்களது மனுவை பரிசீலித்ததில்  இது சட்டத்தின் நடைமுறைகளுக்கு தவறான நோக்கம் கற்பிப்பதாக அமைந்துள்ளது.

எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்வதுடன் இவ்வழக்கு செலவினத்துக்காக 25 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் உத்தரவிடுகிறோம். இந்த தொகையை இன்னும் 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். #SCcesareandeliveries  #SCdismissesplea #cesareandeliveriesguidelines
Tags:    

Similar News