செய்திகள்

டெல்லி, மும்பை, லக்னோவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத்துறை எச்சரிக்கை

Published On 2018-07-25 07:31 GMT   |   Update On 2018-07-25 07:31 GMT
டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய 3 நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

புதுடெல்லி:

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.

பல சமயங்களில் பயங்கரவாதிகளின் சதியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய 3 நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகள் முகாமிட்டு உள்ளனர். இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

ஆயுதப் சப்ளை, பயிற்சி உள்பட பல்வேறு உதவிகளை இந்த பயங்கரவாத அமைப்புக்கு ஐ.எஸ்.ஐ. செய்து வருகிறது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய நகரங்கள் இலக்காக இருக்கிறது.

இந்த அமைப்பின் பயங்கரவாதிகள் சிலர் எல்லை கோட்டு வழியாக காஷ்மீருக்குள் நுழைந்து இருக்கலாம் என்று உளவுத்துறை மத்திய அரசிடம் கொடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித வெடிகுண்டுகளாக சில இளைஞர்கள் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் புகழை கெடுக்கும் வகையில் பல்வேறு மோசமான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது.

உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து டெல்லி, மும்பை, லக்னோ ஆகிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News