செய்திகள்

லதா மங்கேஷ்கருடன் பா.ஜ.க தலைவர் அமித் ஷா சந்திப்பு

Published On 2018-07-22 19:55 GMT   |   Update On 2018-07-22 19:55 GMT
பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆதரவுக்கான தொடர்பு எனும் பிரச்சாரத்திற்காக பிரபல பாடகி லதா மங்கேஷ்கரை சந்தித்து பேசியுள்ளார். #AmitShah #LataMangeshkar
புதுடெல்லி :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து ’’ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை அக்கட்சி அறிமுகம் செய்துள்ளது. 

இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம், கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், தங்களது துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 1 லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும். பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா மட்டும் 50 பேரை தனியாக சந்தித்து பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூறி அவர்களின் ஆதரவை கோர உள்ளார்.

ஆதரவுக்கான தொடர்பு பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, முன்னாள் ராணுவ தளபதிகளான தல்பீர் சிங் சுஹாக் மற்றும் சுபாஷ் காஷ்யாப், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ், தொழிலதிபர் ரத்தன் டாடா, நடிகை மாதுரி தீக்சித் மற்றும் யோகா குரு பாபா ராம் தேவ் உள்ளிட்டோரை அமித் ஷா ஏற்கனவே சந்தித்து பேசி அவர்களது ஆதரவை கோரியுள்ளார்.

இந்நிலையில், பிரபல இந்தி பாடகியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அமித் ஷா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பா.ஜ.க அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்கங்கள் அடங்கிய புத்தகத்தை மங்கேஷ்கரிடம் வழங்கிய அமித் ஷா அவரது ஆதரவையும் கோரினார்.

இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AmitShah #LataMangeshkar

Tags:    

Similar News