செய்திகள்

கோரிக்கைக்கு மாநில அரசு செவி சாய்க்காததால் அரசு பங்களாவை காலி செய்தார் அகிலேஷ்

Published On 2018-05-31 11:55 GMT   |   Update On 2018-05-31 12:11 GMT
அரசு பங்களாவை காலி செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் என மாநில அரசுக்கு விடுத்த கோரிக்கைக்கு பதில் எதுவும் வராததால், தான் வசிக்கும் பங்களாவை உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் காலி செய்துள்ளார். #AkhileshYadav
லக்னோ :

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர்களுக்கு நிரந்தர குடியிருப்பு, அரசு சம்பளத்தில் உதவியாளர்கள், தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட சகல வசதிகளை அளிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் கடந்த சமாஜ்வாடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரித்த நீதிபதிகள், “முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட வசதிகளை அனுபவிக்க உரிமை கிடையாது. முன்னாள் எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தில்தான் அவர்கள் இருப்பர். ஓய்வூதியம் உள்ளிட்ட படிகள் வழங்கும் போது, நிரந்தர குடியிருப்பு வழங்குவது தவறானது” என தெரிவித்தனர். இதனை அடுத்து, அந்த சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதனை அடுத்து, 15 நாட்களில் முன்னாள் முதல்வர்கள் அரசு வீடுகளை காலி செய்ய வேண்டும் என மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது. மாயாவதி தற்போது வசிக்கும் வீட்டை காலி செய்துவிட்டு 15 கோடி மதிப்பில் உள்ள வீட்டில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு அகிலேஷ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், மாநில அரசு செவிசாய்க்க மறுத்த நிலையில், இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்னும் விசாரனைக்கு வராத நிலையில் லக்னோவில் தான் தங்கியிருக்கும் அரசு பங்களாவை காலி செய்யும் பணியை நேற்று இரவே அகிலேஷ் யாதவ் தொடங்கிவிட்டார். இன்று இரவுக்குள் முழுமையாக அரசு பங்களாவை அவர் காலி செய்து சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #AkhileshYadav
Tags:    

Similar News