செய்திகள்

சிறுமிகளைப்போல் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கும் நிவாரணம் - மேனகா காந்தி

Published On 2018-04-25 09:57 GMT   |   Update On 2018-04-25 09:57 GMT
பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகளைப்போல் சிறுவர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட வேண்டும் என மத்திய மந்திரி மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

சிறார் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களை தடுக்கும் குழந்தைகள் பாலியல் வன்முறை சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மட்டுமே நிவாரணம் அளிக்கப்படுகிறது. பலவேளைகளில் சிறுவர்களும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அவர்களுக்கும் இந்த சட்டத்தின்கீழ் நிவாரணம் அளிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலரும் திரைப்பட தயாரிப்பாளருமான இன்சியா தாரிவாலா தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு மனு அனுப்பி இருந்தார்.

இதன் அடிப்படையில் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி கடந்த ஆண்டு அறிவுறுத்தி இருந்தார்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய முதல்கட்ட ஆய்வில் நாடு முழுவதும் சுமார் 160 சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக இன்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மேனகா காந்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுமிகளைப்போல் சிறுவர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் வன்முறை என்பது சிறுவர், சிறுமியர் இருவருக்குமே பொதுவானது. கூச்சம் மற்றும் அவமானம் காரணமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சிறுவர்களில் பெரும்பாலானோர் இதுதொடர்பாக வெளியே தெரிவிக்காமல் மறைத்து விடுகின்றனர். இது மிகவும் முக்கியமான பிரச்சனை. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இந்த கருத்தரங்கின் மூலம் கிடைத்த பரிந்துரைகளின்படி, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் சிறுமிகளுக்கு கிடைக்கும் நிவாரணம், பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் சிறுவர்களுக்கும் கிடைக்கும் வகையில் இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். #malevictims #childsexualabuse #compensation 
Tags:    

Similar News