செய்திகள்

பதான்கோட் பகுதியில் மீண்டும் பயங்கரவாதிகள் நடமாட்டம் - பஞ்சாபில் உச்சக்கட்ட பாதுகாப்பு

Published On 2018-04-16 09:07 GMT   |   Update On 2018-04-16 09:07 GMT
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் மாவட்டத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்தின்மீது கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டது. இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் வீர மரணம் அடைந்தனர்.



இந்நிலையில், நேற்றிரவு பதான்கோட் பகுதி வழியாக சென்ற ஒரு வாகனத்தை இருவர் வழிமறித்தனர். பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த அவர்கள் அந்த வாகனத்தில் ஏறி ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியான கதுவா என்ற இடத்தில் இறங்கிச் சென்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் அப்பகுதிக்கு அறிமுகம் இல்லாத புதிய முகங்கள் என்பதால் உள்ளூர் மக்கள் சந்தேகப்பட்டு இன்று போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் பதான்கோட் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ள போலீசார், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் பரிசோதனைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றன.

Tags:    

Similar News