செய்திகள்

இன்டிகோ- கோ ஏர் நிறுவனங்களின் 626 விமானங்கள் ரத்து

Published On 2018-03-16 05:36 GMT   |   Update On 2018-03-16 05:36 GMT
என்ஜின் கோளாறு காரணமாக வருகிற 31-ந்தேதிவரை நாடு முழுவதும் 626 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இன்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. #indigo #goair
புதுடெல்லி:

உள்நாட்டு விமான போக்குவரத்தில் இன்டிகோ மற்றும் கோ ஏர் தனியார் விமான நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கிறது.

இன்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களின் என்ஜின்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது. நடுவானில் பறக்கும் போது என்ஜின்கள் திடீரென செயலிழப்பதால் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்படுகிறது. இச்சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. குறிப்பாக A320 நியோ ரக விமானங்கள் இந்த பிரச்சனையில் சிக்குகின்றன. இதனால் இந்த விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 1 வாரமாக விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. தினமும் 60க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சிலர் தாங்களாகவே முன் பதிவை ரத்து செய்து விட்டு மாற்று ஏற்பாடுகளில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

விமானங்களை இயக்குவது குறித்து மத்திய விமான போக்குவரத்து ஆணையம் எந்த முடிவும் எடுக்காததால் வருகிற 31-ந்தேதிவரை நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இன்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனங்கள் இந்த மாதத்தில் 31-ந்தேதிவரை மொத்தம் 626 விமானங்களை ரத்து செய்துள்ளன. இதில் இன்டிகோ விமானங்கள் மட்டும் 488 ஆகும். இதன் மூலம் சராசரியாக 1200 விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. கோ ஏர் நிறுவனம் 31-ந்தேதிவரை 138 விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்கள் குறித்த தெளிவான தகவல் உரிய இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்டிகோ நிறுவனம் கடந்த 15-ந்தேதி முதல் நாள் தோறும் 36 விமானங்களை ரத்து செய்து வருகிறது. கோ ஏர் நிறுவனம் தினமும் 26 விமானங்களை ரத்து செய்கிறது.

தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் விமானங்களில் முன் பதிவு செய்ய இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மாற்று விமானங்களில் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், சிரமத்தை பொறுத்துக் கொள்ளுமாறும் இன்டிகோ விமான நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையில் செல்வோர் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் மாற்று ஏற்பாடு மூலம் பயணத்தை தொடர முடிவு செய்துள்ளனர். #indigo #goair #tamilnews

Tags:    

Similar News