செய்திகள்

சத்தமாக சிரித்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி: சாதுரியமாக பதில் அளித்தார் பிரதமர் மோடி

Published On 2018-02-07 20:45 GMT   |   Update On 2018-02-07 20:45 GMT
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசிய போது, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார். அவரது சிரிப்புக்கு பிரதமர் மோடி சாதுரியமாக பதிலளித்தார்
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசிய போது, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார். அவரது சிரிப்புக்கு பிரதமர் மோடி சாதுரியமாக பதிலளித்தார்

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், இரு அவைகளும் அடங்கிய கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது. அந்த விவாதத்துக்கு மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதில் அளித்து பேசினார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.பி. ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார்.

இதைக்கண்ட மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு, ஒட்டுமொத்த நாடே நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் கேலிப் பொருளாகி விடக்கூடாது என கண்டிப்புடன் கூறினார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘சபாநாயகரே! ரேணுகா சவுத்ரியை எதுவும் சொல்லாதீர்கள். அவர் சிரிக்கட்டும். ராமாயணம் சீரியலுக்கு பிறகு, இத்தனை சப்தத்துடன் சிரிக்கும் பெண்ணை பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது என சாதுரியமாக கூறினார்.

இதிகாசமான ராமாயணத்தில் இப்படி சத்தமாக சிரிக்கும் பெண் கதாபாத்திரம் யார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

மோடியின் உடனடியான, சாதுர்யமான பதிலை கேட்டதும், பா.ஜ.க.வினர் சிரித்தனர். ரேணுகா சவுத்ரியால் பதில் பேச முடியவில்லை.

இதுதொடர்பாக ரேணுகா சவுத்ரி கூறுகையில், பெண்களை இழிவுபடுத்துவது போல் மோடி பேசியுள்ளார். என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த மோடியிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? என்னால் அவர் அளவுக்கு இறங்கி பேச முடியாது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News