செய்திகள்

குஜராத்: பத்மாவத் படத்துக்கு எதிராக கலவரம் - வணிக வளாகத்தில் பைக்குகள் தீவைத்து எரிப்பு

Published On 2018-01-23 20:55 GMT   |   Update On 2018-01-23 20:55 GMT
நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குஜராத்தில் உள்ள வணிக வளாகம் நேற்று சூறையாடப்பட்டது. #Padmavat #DeepikaPadukone
அகமதாபாத்:

நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குஜராத்தில் உள்ள வணிக வளாகம் நேற்று சூறையாடப்பட்டது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி திரைப்படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த படம் ‘பத்மாவத்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தணிக்கை குழுவினர் படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கி அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த படம் வருகிற 25-ம் தேதி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், குஜராத், அரியானா, மத்தியபிரதேசம் ஆகிய பா.ஜனதா ஆளும் 4 மாநிலங்கள் ‘பத்மாவத்’ படத்துக்கு தடை விதித்தது. சுப்ரீம் கோர்ட்டு இந்த தடையை நீக்கி இருந்தது.

இந்த மாநிலங்களில் படம் வெளியிடும்போது சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், ‘பத்மாவத்’ படத்துக்கு எதிராக குஜராத்தில் நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. குஜராத் மாநிலத்தில் ராஜ்புத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் ‘பத்மாவத்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அகமதாபாத்தி்ல் நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

அகமதாபாத் நகரில் உள்ள பி.வி.ஆர். மல்டிப்ளக்ஸ் காம்பளக்சில் பத்மாவத் திரைப்படம் திரையிட உள்ளதை அறிந்த ஒரு கும்பல் இரவில் அங்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்தது.

அப்போது அந்த கும்பல் திடீரென வன்முறையில் இறங்கியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட மோட்டார் பைக்குகள் தீ வைத்து த எரிக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வன்முறை கும்பலை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அகமதபாத் முழுவதும் வன்முறை பரவியது. கலவரத்தை அடக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  #Padmavat #DeepikaPadukone #tamilnews
Tags:    

Similar News