செய்திகள்

குஜராத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட தலைமறை குற்றவாளிக்கு 14 நாள் சிறைக்காவல்

Published On 2018-01-22 12:28 GMT   |   Update On 2018-01-22 12:28 GMT
குஜராத் தொடர் குண்டு வெடிப்பில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து பிடிபட்ட இந்திய முஜாஹிதீன் இணை நிறுவனரை 14 நாள் போலீஸ் காவலில் அடைக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டது. #IndianMujahideen #AbdulSubhanQureshi
புதுடெல்லி:

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ரெயில்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அதுபோல ஆமதாபாத்தில் 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி அடுத்தடுத்து 21 குண்டுகள் வெடித்தன. அதில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். அதே ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி டெல்லியிலும் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன.

இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு நடத்தியவன் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் இணை நிறுவனர் தீவிரவாதி அப்துல் சுபான் குரேஷி என்ற தாகீர் என்று தெரிய வந்தது. இவனை தேசிய விசாரணை குழுவினர் கடந்த 8 ஆண்டுகளாக தேடி வந்தனர்.

ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக அவன் போலீசாரிடம் பிடிபடாமல் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு கடும் சவாலாக திகழ்ந்தான். இந்த நிலையில் அவன் டெல்லியில் ஊடுருவி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

டெல்லியில் அவன் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். சிறப்பு போலீஸ் கமி‌ஷனர் ஒபேராய் தலைமையில் போலீஸ் படை ஒன்று கடந்த சனிக்கிழமை அவன் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தது. போலீசாரை கண்டதும் அவன் தப்ப முயன்றான். இதையடுத்து அவனுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. பிறகு அவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

நேபாளம் நாட்டில் போலி அடையாளத்துடன் வாழ்ந்துவந்த அப்துல் சுபான் குரேஷி கடந்த 2015-2017 ஆண்டுகளுக்கிடையில் சிலமுறை சவுதி அரேபியாவுக்கு சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், டெல்லி தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அப்துல் சுபான் குரேஷியை போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். அவனிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் போலீஸ் காவலில் ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

இதை ஏற்றுகொண்ட டெல்லி தலைமை மாஜிஸ்திரேட் தீபக் ஷெராவத் அவனை 14 நாட்கள் போலீஸ் காவலில் அடைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். #tamilnews #IndianMujahideen #AbdulSubhanQureshi
Tags:    

Similar News