செய்திகள்

உ.பி.யில் உறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட 9 பேர் உயிரிழப்பு: கள்ளச்சாராய பலியா? என விசாரணை

Published On 2018-01-11 04:13 GMT   |   Update On 2018-01-11 04:13 GMT
உத்தர பிரதேசத்தில் ஒரு வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், உணவுடன் மது அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் தால் குர்த் கிராமத்தைச் சேர்ந்த  ஒருவரின் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தால் குர்த் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த உறவினர்கள் பலர் கலந்துகொண்டனர். விருந்தின்போது உணவு வகைகளுடன், வீட்டில் தயாரிக்கப்பட்ட மதுவும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது.

விருந்து முடிந்த சிறிது நேரத்தில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை குடித்ததால் அவர்கள் இறந்ததாக புகார் எழுந்துள்ளது.



இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராய பலி என்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்யவில்லை. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, உறுதியான தகவல்கள் தெரியவரும்.

உத்தர பிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர்ப்பலி ஏற்பட்டால், அதனை விற்பனை செய்த சாராய வியாபாரிக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #tamilnews
Tags:    

Similar News