செய்திகள்

13 வயது பேத்தியுடன் பரத நாட்டியம் ஆடும் 68 வயது பாட்டி

Published On 2017-12-17 13:39 GMT   |   Update On 2017-12-17 13:39 GMT
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 68 வயது பரத நாட்டிய தாரகை தனது 13 வயது பேத்தியுடன் பெங்களூரு நகரில் வரும் 21-ம் தேதி நாட்டிய நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரை சேர்ந்தவர் தேவா ஜித்தேந்திரா நஹாதா. எழுத்தாளராகவும், கவிஞர் மற்றும் பாடகியாகவும் இருக்கும் இவர் பின்னாட்களில் பரத நாட்டிய குரு கே.எம்.ராமன் மற்றும் அவரது மகளான சத்யாவதி சுரேஷ் ஆகியோரிடம் பரத நாட்டியம் பயின்று கடந்த 2010-ம் ஆண்டு தனது 60-வது வயதில் முதல் நடன அரங்கேற்றத்தை நடத்தினார்.

கலையார்வத்துக்கும், விடாமுயற்சிக்கும் வயது ஒரு தடையே அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற நாட்டிய விழாவில் விஹார் மஞ்ச் கலைக்கூடத்தின் ’பிரம்மி கலா’ விருதை பெற்றார். பிரபல இந்தி கவிதைகளை நாட்டிய வடிவில் ‘பாவ அபினயா’ என்ற பெயரில் அரங்கேற்றியுள்ளார்.

இந்நிலையில், தனது பேத்தி சவிடோல் நஹாதாவை பரத நாட்டிய வகுப்பில் சேர்த்து, தேர்ச்சி பெறவைத்த தேவா ஜித்தேந்திரா நஹாதா(65), தற்போது 13 வயதாகும் பேத்தியுடன் ஒன்றாக மேடையேற தீர்மானித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் சவிடோல் நஹாதா, தனது நான்காம் வயதில் இருந்து மேற்கத்திய  ‘பாலட்’ நடன பயிற்சி பெற்று ‘சின்ட்ரெல்லா’, ‘சிலீப்பிங் பியூட்டி’ உள்ளிட்ட சில பாலட் வகை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் கற்றல் தவிர இதர கலைகளிலும் சிறந்த மாணவியாக வந்துள்ளார்.

பாட்டி அளித்த ஊக்கத்தினால் தனது ஏழாம் வயதில் இருந்து பரத்ஜி விட்டல் என்பவரிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்றுள்ளார். பாட்டியுடன் சேர்ந்து ஒரே மேடையில் நடனமாடும் அரிய வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார்.

‘நிருத்திய சங்கம்’ என்ற பெயரில் 68 வயது பாட்டியும் 13 வயது பேத்தியும் நடனமாடும் பரத நாட்டிய நிகழ்ச்சி பெங்களூரு நகரில் உள்ள சவுடையா நினைவு அரங்கத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.
Tags:    

Similar News