செய்திகள்

இரண்டு தொகுதியில் போட்டியிட தேர்தல் கமிஷன் எதிர்ப்பு

Published On 2017-12-11 21:45 GMT   |   Update On 2017-12-11 21:45 GMT
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், ஒருவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, தேர்தல் கமிஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் ஒரே நபர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபதய் என்பவர் சார்பில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது ஆஜரான வழக்கறிஞர் உபதய், ‘ஒருவருக்கு ஒரு வாக்கு, அதேபோல் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு ஒரு தொகுதி என்பதே சரியானது. ஆனால் இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். ஆனால் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், ஒரு தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக மட்டுமே செயல்பட முடியும். இதனால் மற்றொரு பதவியை ராஜினாமா செய்யவேண்டும்’, என கூறினார்.

அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டாலும், மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தின்படி ஒரு தொகுதியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருக்க முடியும். அதனால் மற்றொரு தொகுதியில், அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் அந்தத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். இதனால் அரசுக்கு அதிக செலவாகிறது. அதனால் ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் படி சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் அல்லது ராஜினாமா செய்யும் தொகுதிக்கு இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.

எம்.எல்.ஏ. தொகுதிக்கு ஐந்து லட்சம் ரூபாயும், எம்.பி. தொகுதிக்கு 10 லட்சம் ரூபாயும் வசூலிக்கலாம் என பரிந்துரை செய்துள்ளோம். மத்திய அரசுக்கு ஏற்கனவே 2004 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மத்திய அரசு தான் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இதுகுறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News