செய்திகள்

சபரிமலையில் ரூ.1000 கட்டணத்தில் அய்யப்பனை தரிசிக்கும் திட்டம் ரத்து

Published On 2017-11-24 07:49 GMT   |   Update On 2017-11-24 07:49 GMT
சபரிமலையில் சாமி தரிசனத்துக்கு பணம் வசூலிக்கும் சிறப்பு தரிசன திட்டத்தை ரத்து செய்து தேவசம்போர்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சபரிமலையில் தனிகட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி சிறப்பு தரிசனம் செய்யும் வழக்கம் கிடையாது. வேறுபாடு இல்லாமல் சன்னிதானத்தில் அனைவரும் சமமாக நின்றே சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

இந்த நிலையில் அன்னதான திட்டத்திற்கான நிதியை பெருக்குவதற்காக புது திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி அன்னதான திட்டத்துக்கு ரூ.1000 நிதி கொடுத்தால் சிறப்பு தரிசனம் செய்யும் வசதி செய்யப்பட்டது.

இதனால் மணிக்கணக்கில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

மேலும் பணத்தை கொடுத்து சாமி தரிசனம் என்ற புதுநடைமுறையும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தேவசம்போர்டு கூட்டத்தில் இந்த திட்டம் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அப்போது சாமி தரிசனத்துக்கு பணம் வசூலிக்கும் முறை தேவையற்றது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் இந்த சிறப்பு தரிசன திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. வழக்கமான நடைமுறையே இனி அமலில் இருக்கும்.

தற்போது மண்டல கால பூஜைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் செல்வதால் நாளை (24-ந் தேதி) பம்பை முதல் சன்னிதானம் வரை சபரிமலையை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. இதில் போலீசார், தேவசம் போர்டு, அய்யப்ப சேவா சங்கம் ஆகியவை கலந்து கொள்கின்றன.

Tags:    

Similar News