செய்திகள்

தேசியக் கொடி அவமதிப்பு: ஹர்திக் படேல் மீதான வழக்கை வாபஸ் பெற்றது குஜராத் அரசு

Published On 2017-10-12 07:51 GMT   |   Update On 2017-10-12 07:51 GMT
இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஹர்திக் படேல் மீது, தேசியக் கொடியை அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கை குஜராத் அரசு வாபஸ் பெற்றுள்ளது.
ராஜ்கோட்:

குஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஹர்திக் படேல் இந்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்தி வந்தார்.

இதற்கிடையே, குஜராத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் படேல் சமுதாயம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஹர்திக் படேலை போலீசார் கைது செய்ய முயன்றனர். போலீசிடம் இருந்து தப்பிக்க அவர் காரின் கூரை மீது ஏறி அமர்ந்தார். அப்போது அவரது கால் காரில் பறந்த தேசியக் கொடி மீது பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் படேல் மீது பதாரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ஹர்திக் படேல் மீது தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை குஜராத் மாநில அரசு இன்று வாபஸ் பெற்றது.

இதுதொடர்பாக ராஜ்கோட் கலெக்டர் விக்ராந்த் பாண்டே கூறுகையில், மாநில அரசின் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரில் ஹர்திக் படேல் மற்றும் பதிதார் அனாமத் அந்தோலன் சமிதி ஆதரவாளர்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்படுகிறது.
போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட மற்ற 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மற்ற நடைமுறைகள் நீதிமன்றங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

தேசியக் கொடியை அவமதிப்பு செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் மாநில  அரசு வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News