செய்திகள்

பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தான் பெண் சுட்டுக்கொலை

Published On 2017-10-05 22:37 GMT   |   Update On 2017-10-05 22:37 GMT
பஞ்சாப் எல்லையில் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் பெண்ணை பாதுகாப்புபடை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
குர்தாஸ்பூர்:

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைந்து உள்ள தேரா பாபா நானாக் செக்டார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கனியா கீ என்ற இடத்தில் உள்ள ராணுவ சாவடிக்கு அருகே சந்தேகப்படும்படியான நடவடிக்கை நிகழ்வதை பாதுகாப்புப்படை வீரர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து இந்த பகுதியை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒரு பெண் எல்லை தாண்டி ஊடுருவி வந்திருப்பது தெரியவந்தது.

பாதுகாப்புபடை வீரர்கள் அந்த பெண்ணை, தங்களிடம் சரணடைந்து விடும்படி எச்சரித்தனர். ஆனால் அந்த பெண் அதற்கு செவிசாய்க்காமல், பாதுகாப்புபடை வீரர்களை நோக்கி முன்னேறி வந்தார். இதையடுத்து, வேறுவழியின்றி பாதுகாப்புபடை வீரர்கள் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

அந்த பெண்ணின் உடலை பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தபோது, அவர்கள் அதனை வாங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, அந்த பெண்ணின் உடல் தேரா பாபா நானாக் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News