செய்திகள்

பத்ரிநாத் யாத்திரை நவம்பர் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது

Published On 2017-09-30 14:42 GMT   |   Update On 2017-09-30 14:42 GMT
பத்ரிநாத் யாத்திரை வரும் நவம்பர் 19-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
டேராடூன்:

இந்துக்களின் புகழ்பெற்ற புனித தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்த 4 தலங்களை உள்ளடக்கிய புனித யாத்திரை ‘சார்தாம்’ என்று அழைக்கப்படுகிறது.

இதில் கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் அமைந்துள்ளதால் இவை முக்கியமான புனித தலங்களாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் குளிர்காலத்தில் இந்த யாத்திரை நிறைவு பெற்று,  அக்டோபர்-நவம்பரில் கோயில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டு குளிர் காலத்தை முன்னிட்டு பத்ரிநாத் யாத்திரை வரும் நவம்பர் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு பத்ரிநாத் கோயிலின் நிர்வாக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், வரும் நவம்பர் 19-ம் தேதி இரவு 7.30 மணியளவில் நடைபெறும் பூஜையுடன் கோயில் நடை சாத்தப்படுகிறது. இதை தொடர்ந்து அன்றைய தினம் முதல் பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் யாத்திரை நிறைவடைகிறது.

இதேபோல், மற்றொரு தலமான கேதார்நாத் யாத்திரையும் அக்டோபர் 21-ம் தேதி நிறைவடைகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News