செய்திகள்

5 நாள் சுற்றுப்பயணம்: ஷார்ஜா மன்னர் கேரளா வந்தார்

Published On 2017-09-24 13:29 GMT   |   Update On 2017-09-24 13:29 GMT
கேரளா மாநிலத்தில் ஐந்துநாள் சுற்றுப்பயணம் செய்வதற்காக வந்துள்ள ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முஹம்மது அல்-காசிமி இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தார்.
திருவனந்தபுரம்:

ஷார்ஜா நாட்டுக்கு கடந்த ஆண்டு சென்றிருந்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அரசு விருந்தினராக தங்கள் மாநிலத்துக்கு வருமாறு ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முஹம்மது அல்-காசிமி-க்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பின்பேரில் இன்று கேரளாவுக்கு வந்த ஷார்ஜா மன்னரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் இதர மந்திரிகள், அரசு உயாதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.

சிகப்பு கம்பள வரவேற்புக்கு பின்னர் மாநில போலீசார் அளித்த அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

அவரது வருகை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள பினராயி விஜயன், நான் ஷார்ஜாவுக்கு சென்றிருந்தபோது மன்னரின் விருந்தோம்பலும் அவர் கேரள மாநிலத்தவர்களை பற்றி தெரிவித்த உயர்வான கருத்துகளும் இன்றளவும் பசுமையாக நினைவில் உள்ளது. அவரது வருகையால் ஷார்ஜாவுக்கும் கேரளாவுக்கும் இடையிலான நல்லுறவுகள் மேம்பாடு அடையும் என குறிப்பிட்டுள்ளார்.



திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ் பவனில் கவர்னர் சதாசிவத்தை நாளை சந்திக்கும் ஷார்ஜா மன்னர் சுல்தான் பின் முஹம்மது அல்-காசிமி, அழகிய கடற்கரை நகரமான கோவளத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் அளிக்கும் சிறப்பு விருந்தில் பங்கேற்கிறார்.



கவர்னர் மாளிகையில் வரும் 26-ம்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஷார்ஜா மன்னருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. வரும் 28-ம் தேதிவரை இங்கு தங்கியிருக்கும் அவர் வேறுசில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார் என தெரிகிறது.
Tags:    

Similar News