செய்திகள்

கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம்: ஆக்சிஜன் சப்ளையர் கைது

Published On 2017-09-17 10:54 GMT   |   Update On 2017-09-17 10:54 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக ஆக்சிஜன் சப்ளையரை போலீசார் இன்று கைது செய்தனர்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த துயர சம்பவத்துக்கு போதிய ஆக்சிஜன் கையிருப்பு இல்லாததுதான் காரணம் என தெரியவந்தது. அந்த மருத்துவமனைக்கு உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யும் பொறுப்பை இங்குள்ள புஷ்பா ஏஜென்சி நிறுவனம் ஏற்றிருந்தது.

ஆனால், அனுப்பிய ஆக்சிஜனுக்கு உரிய முறையில் பணம் தர மருத்துவமனை நிர்வாகம் லஞ்சம் கேட்டதால் சிலிண்டர்களை தொடர்ந்து அனுப்ப அந்த நிறுவனம் மறுத்து விட்டதாக முன்னர் தகவல் வெளியானது.

இந்நிலையில், கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் மரணம் அடைந்தது தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த புஷ்பா ஏஜென்சி உரிமையாளர் மணிஷ் பண்டாரி என்பவரை டெயோரியா பகுதியில் போலீசார் இன்று கைது செய்தனர்.
Tags:    

Similar News